சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உட்பட 02 நபர்கள் கைது

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உட்பட 02 நபர்கள் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தென்காசி மாவட்டத்தில்  பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய பொலிஸார், கொலை வழக்கில் கள்ளக்காதலன் மற்றும் அவரது காதலியைைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியில் இருந்து திருமலைக்கோவில் செல்லும் பிரதான சாலை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலத்தூர் பொலிசார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக அந்தத் தோட்டத்திற்கு வந்தார் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஒரு வாரமாகத் துப்பு கிடைக்காமல் பொலிசார் திணறல்

சம்பவம் நடைபெற்ற இடத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு சிசிடிவி கேமராக்களையும் பொலிசார் ஆய்வு செய்யத் தொடங்கினர். கொலை நடைபெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நேரத்தில், அந்தப் பகுதியில் சென்ற வாகனங்கள் குறித்தும் பொலிசார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சம்பவ நேரத்தில் அந்த வழியாக வாடகை கார் ஒன்று சென்றிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்தக் காரின் பதிவு விவரங்களை வைத்துப் பொலிசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், அந்த வாடகை கார் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தென்காசிப் பொலிசார் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று காரின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

வாடகை காரை வைத்துச் சிக்கிய மகேஷ் குமார்

விசாரணையின்போது, தென்காசிப் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் காரை வாடகைக்கு அழைத்துச் சென்றதாக ஓட்டுநர் பொலிசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மகேஷ் குமார் குறித்துப் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற பொலிசார் மகேஷ் குமாரைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியLயானதாகப் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நூடுல்ஸ் வாங்கச் சென்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்

விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்தவித் ரஹ்மத் என்பவரின் மனைவியான கம்சா என்ற நிஷா, மகேஷ் குமார் பணிபுரிந்த ஹோட்டலுக்கு அடிக்கடி நூடுல்ஸ் வாங்கச் சென்று வந்தது தெரியவந்துள்ளது.

அப்போது, மகேஷ் குமாருக்கும் நிஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அந்தப் பழக்கம் நெருக்கமாகி இருவருக்கும் இடையே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு ஏற்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும், அதற்கு நிஷாவின் கணவர் அப்தவித் ரஹ்மத் தடையாக இருப்பதாக இருவரும் கருதியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
 
தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற தந்திரம்

அப்தவித் ரஹ்மத் ஷட்டர் வேலை செய்து வந்ததை அறிந்த மகேஷ் குமார், அவரை அணுகித் தென்காசி மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் ஷட்டர் வேலை இருப்பதாகக் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வேலைக்கு நல்ல தொகை கிடைக்கும் என்றும், எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாகவும் கூறி ரஹ்மத்தை மகேஷ் குமார் தனது வாடகை காரில் அழைத்துச் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் குறிப்பிட்ட தோட்டத்திற்குச் சென்ற பின்னர், அங்கு ஷட்டர் அமைக்க வேண்டிய இடத்தை அளவெடுக்குமாறு ரஹ்மத்திடம் மகேஷ் குமார் கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரைண்டர் கல்லால் தாக்கிட்டுக் கொலை செய்ததாக வாக்குமூலம்

ரஹ்மத் தோட்டத்திற்குள் சென்று வேலைக்கான இடத்தை அளவெடுத்துக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து மகேஷ் குமார் கிரைண்டர் கல்லால் அவரது தலையில் பலமாகத் தாக்கியதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஹ்மத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது உடலை அங்கேயே விட்டுவிட்டு மகேஷ் குமார் அதே வாடகை காரில் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாகச் சிசிடிவி காட்சிகள், வாடகை கார் விவரங்கள் மற்றும் பொலிஸ் விசாரணையில் கிடைத்த தகவல்களை ஒன்றிணைத்து, பொலிசார் வழக்கின் பின்னணியைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
மனைவியும் கள்ளக்காதலனும் கைது

இதனையடுத்து, கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மகேஷ் குமார் மற்றும் கம்சா என்ற நிஷா ஆகிய இருவரையும் இலத்தூர் பொலிசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு வாரமாக மர்மமாக இருந்த ஆண் சடலத்தின் அடையாளம் மற்றும் கொலைக்கான பின்னணி, சிசிடிவி காட்சிகள் மற்றும் வாடகை கார் தொடர்பான விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்ய மனைவியும் அவரது கள்ளக்காதலனும் திட்டமிட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், தென்காசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

 

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்