டெல் அவிவ்: துபாயிலிருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், விமானத்தை கடத்தவும், 180 பயணிகளை கொல்லவும் முயற்சி நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, "துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி வந்த ஃபிளைதுபாய் விமானத்தின் பைலட், சக பைலட்டை கத்தியால் குத்திவிட்டு, ஒட்டுமொத்த விமானத்தையும் பயயணிகளுடன் சேர்த்து வேண்டுமென்றே கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றார்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பயணி ஒருவருடன் நான் பேசினேன். அந்த பயணியும் ஒரு விமான பயணியாளரும் உடனடியாக துணிச்சலாக விமானி அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பைலட்டை மடக்கி பிடித்தனர்.
தாக்குதல் நடத்திய பைலட் தற்போது சவூதி அரேபிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அங்கு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இஸ்ரேலுக்குள் வரும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் பைலட்களின் அடையாளங்களை தீவிரமாக சரிபார்க்கவும், அவர்களன் பின்னணி குறித்த பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்திய பைலட்டின் துணிச்சல்
இந்த விமானம் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே 40,000 அடியிலிருந்து சட்டென 15,000 உயரத்திற்கு கீழே இறங்கியது. மட்டுமல்லாது விமானத்திலிருந்து கடத்தல் எச்சரிக்கையும் பறந்தது. காக்பிட்டில், மொத்தம் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒருவர் இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சார். இவர்தான் விமானத்தின் கேப்டன். மற்றொருவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர். இவர் துணை கேப்டன்.
இவர்தான் இந்திய விமானியை தாக்கியிருக்கிறார். கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். ஆனாலும் ரத்த வெள்ளத்தில் இருந்த இந்திய கேப்டன், உடனடியாக நிலைமையை சமாளித்து விமானத்தை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அவருக்கு உதவியாகத்தான் இஸ்ரேல் பயணி ஒருவர் இருந்திருக்கிறார்.
கடைசியில் 180 பயணிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்திய கேப்டனின் செயல் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது.




