இலங்கையில் அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் வரப்போகிறதோ? என்று எண்ணுகின்ற அளவுக்கு தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது.
அரசாங்கத்தின் “ஊழல் ஒழிப்பு” குரலையும் எதிர்க்கட்சிகளின் “அரசியல் பழிவாங்கல்” கூக்குரலையும் நாமலின் கைது “கல்லும் தேங்காயும் சந்தித்த கதை”யாக மாற்றியிருக்கிறது.
தென்னிலங்கை அரசியலில் பிளவுபட்டு நிற்கிறது. மக்கள் இரண்டு அணிகளாக திரண்டு இருக்கிறார்கள். இந்த களநிலை மாற்றத்தை நாமலின் கைதுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் அரசாங்கம் சரியாக கணிப்பிட்டதா? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

ரணில் விக்கிரமசிங்க
கடந்த ஆட்சியாளர்களின் ஊழல், இலஞ்சம் தொடர்பான விசாரணைகள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடனான லண்டன் பயணம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அப்போது அரசியலில் பலம் இழந்த கட்சியின் தலைவர் ஒருவரை தெரிவு செய்து கைதுசெய்து இருப்பதாக எதிர்த்தரப்பு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

நாமல் ராஜபக்ச
நாமல் ராஜபக்ச தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 75 ஆண்டுகள் அரசியல் ஆணிவேரைக்கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். இலங்கை படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலி களுக்கும் இடையிலான உள்நாட்டு போரில் ராஜபக்சாக்களின் அரசியல் தலைமைத்துவம் போர்வெற்றி வரை நீண்டகாலம் களத்தில் நின்று போராடிய ஒன்று. “பயங்கரவாதத்தில்” இருந்து சிங்கள தேசத்தை மீட்டவர்களாக தென்னிலங்கை சிங்கள மக்களும், பௌத்த பீடங்களும் கருதுகின்றனர். இந்த மனநிலையின் வெளிப்பாடே என்.பி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் நுகேகொட கூட்டத்தில் கூடிய மக்கள் கூட்டமும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அநுராதபுரத்தில் கூடிய மக்கள் கூட்டமும் எமக்கு சொல்கிறது.
42 வீதம் மக்கள் ஆதரவைப்பெற்று இரண்டாவது விருப்புவாக்கு கணிப்பில் நிறைவேற்ற அதிகாரத்தை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், 159 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அவரது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்றமும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் உள்ள நிலையில் மிகவும் விரைவாக மக்களின் ஆதரவை அரசாங்கம் இழப்பதற்கு காரணம் என்ன?
ஊழல், இலஞ்ச ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள், பல்வேறு பட்ட நிவாரண அறிவிப்புகள், சர்வதேச அமைப்புகளுடனான நல்லுறவு -அவர்கள் வழங்கும் நற்சான்றிதழ்கள்……. போன்ற இத்தனைக்கும் மத்தியில் இந்த அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு குறைவடைய அல்லது மக்கள் இந்த அரசாங்கத்தில் வெறுப்படைய காரணம் என்ன?
யாரெல்லாம் ஊழல்வாதிகள், திருடர்கள், கள்வர்கள், கொள்ளையர்கள்…. என்றெல்லாம் முன்னாள் அரசியல்வாதிகளை அரசாங்கமும், அரச தலைமையும் குறிப்பிடும் போது அதன் நம்பகத்தன்மையை மக்கள் கேள்விக்குட் -படுத்துகிறார்களா? இதற்கு பின்னால் உள்ள அரசியல் பழிவாங்கலை – கட்சி அரசியலை இனம் காண்கிறார்களா?

வடக்கு, கிழக்கு, மலையக எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களை விடுங்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை, அவர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, மாகாணசபை தேர்தல், காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரங்களை தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதற்கு மாறாக அரசாங்கம் மொழிபெயர்ப்பு செய்கிறது. இதனால் இந்த மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனால் சிங்கள மக்கள்….? சுண்டுக்கொத்து, கொத்தமல்லி பேச்சுக்கள் மக்களை அரச தலைமை அவமானப் -படுத்துவதாகவும், மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் அமைகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தங்களை நிர்ப்பந்திக்கிறது என்பது மக்களுக்கு நன்கு புரிகிறது.
ஒட்டுமொத்த இலங்கையில் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. வேலையின்மை, வருமானம் குறைவு, விலைவாசி உயர்வு போன்றவற்றுடன் கிராமிய மட்டத்தில் அரசாங்கத்தின் கட்சி அரசியல் புறக்கணிப்பும், முன்னுரிமையும் மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. இதனால்தான் கூட்டுறவுச்சங்கத் தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.
நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டு கட்சி இவற்றில் இருந்து தங்களுக்கு நிவாரணம் தரும் என்று மக்கள் நம்புவதைவிடவும் தாம் தேர்தல் பொய்வாக்குறுதிகளின் மூலம் ஏமாற்றப்பட்டிருப்பது அவர்களுக்கு வருத்தமளிக்கிறது.
அரசாங்கம் உயர்தர, நடுத்தர வர்க்கத்தினருக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதல்ல. கீழ் மட்டத்தில் உள்ள தங்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்பதே அவர்களின் கேள்வி. ஒரு கோடீஸ்வரர் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு செலுத்தும் விலைக்கும், ஒரு சாதாரண விவசாயி, மீனவர், தோட்டத்தொழிலாளி செலுத்தும் விலைக்கும் வேறுபாடில்லை. அதே போன்று தான் அத்தியாவசியப் பொருட்களின் விலையும். ஒரே விலை ஆனால் அதன் பொருளாதார சுமை சமமானதல்ல.
இந்த பொதுவான சமூக, பொருளாதார நிலைகளுக்கு அப்பால் என்.பி.பி. அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைமையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க/ ரணில் ராஜபக்ச காலம் அரசியல் முடிவை நெருங்குகின்ற நிலையில் ஒரு மாற்றுத்தலைமையை தென்னிலங்கை மக்கள் தேடுகின்றனர். சஜீத் பிரேமதாசாவின் கடந்த கால தலைமைத்துவம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருப்பதுமட்டும் போதாது மக்கள் மத்தியில் ஒருசெயற்பாட்டு அரசியல் அவசரதேவையாக உள்ளது. இதை ஒப்பீட்டளவில் நாமல் ராஜபக்ச வழங்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ரணிலுக்கும், சஜீத்திற்கும் இடையிலான பொது உடன்பாடற்ற தலைமைத்துவப் போட்டி மக்களுக்கு கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களை நினைவூட்டுகிறது.
தாங்கள் விட்ட தவறின் குற்ற உணர்வாகவும் அது வெளிப்படுகிறது. ஆக, மூன்று உறுப்பினருடன் இருந்த ஜே.வி.பி.யை கடந்த தேர்தலில் ஆட்சியில் அமர்த்தியது போன்று தற்போது மூன்று உறுப்பினர்களுடன் உள்ள மொட்டு கட்சியின் பக்கம் அவர்கள் படிப்படியாக திரும்புகின்றனர். திசை காட்டி விடும் ஒவ்வொரு அரசியல் தவறும் மக்களை மொட்டுவின் பக்கமே திசையை காட்டும் என்பதையே அநுராதபுரம் எமக்கு சொல்லும் செய்தியாகும்.
சிறாபான்மையினர் கட்சிகளை அல்லது மக்களை பொறுத்து மட்டில் ராஜபக்சாக்களுக்கு எதிரான அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் முதன்மை பெறுகிறது. இது ஊழல், இலஞ்சம், போதைப்பொருள் என்று பேசப்பட்டாலும் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் ஒழிந்து இருப்பது முள்ளிவாய்க்கால், ஈஸ்டர் படுகொலை, ஜனாஷா எரிப்பு. இந்த பழிவாங்கல் அரசியலே கொள்கையற்று சரத்பொன்சேகாவுக்கும், பழிவாங்குவதற்காக சஜீத்திற்கும் புள்ளடிபோடவைத்தது. இந்த அணுகுமுறை தென்னிலங்கை சிங்கள மக்களை தடுத்து நிறுத்துமா? என்பதை இப்போது கூறுவது கஷ்டம்.
22 வது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த ஜே.வி.பிக்கு எதிரான அதன் என்.பி.பி.யின் பங்காளிகளின் நிலைப்பாடு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. பிரதமர் ஹருணி அமரசூரிய , சட்டத்தரணிகள் சங்க தலைவரும், பிரதமரின் சகோதரருமான சஜீவ் அமரசூரியவின் நிலைப்பாட்டுடன் உடன்படுவதாக தெரியவருகிறது. நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையா? அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், மக்கள் வாக்கெடுப்புமா? என்பதை பொறுத்தே என்.பி.பி.யில் ஏற்பட்டுள்ள கீறலை நீக்குவது தங்கியிருக்கிறது.
22 வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது பிரதமர் ஹருணி அமரசூரிய வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்படும் அறிக்கை குறித்து கொழும்பு வட்டாரங்களில் கசியும் செய்திகள் உண்மையாயின் அது என்.பி.பி.யில் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகின்ற கீறலை ஆழப்படுத்தும்-வெளிப்படுத்தும். அப்படி நடந்தால் அந்த அரசியல் அறுவடையையும் எதிர்க்கட்சிகளே பங்கிட்டுக்கொள்ளும்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தனது ஆட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி ஆட்சியை நீடித்தார். ஜே.வி.பி. இன்னும் 30 ஆண்டுகள் ஆளப்போவதாக கூறுகிறது.
அரசியல் எதிரிகளை பழிவாங்க சிறிமாவோ பண்டாரநாயக்கா, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரின் குடியுரிமையை பறித்து ஜனநாயக எதிர்க்கட்சி அரசியலை பலவீனப்படுத்தினார். இந்த நினைவூட்டலோடு நாமல்: மொட்டுக்கட்சியின் எதிர்காலம் (?) என்ற இந்த பத்தி நிறைவு பெறுகிறது.
— அழகு குணசீலன் —


