யெமனில் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் கைப்பற்றும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை அந்நாட்டில் சவூதி அரேபிய ஆதரவு, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆரம்பித்துள்ளது.
‘நாடு பயங்கரவாதப் போராளிக் குழுவின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் வரை அரசின் ஆயுதப் படைகள் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கும்’ என்று யெமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
அன்சார் அல்லா என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2014 தொடக்கம் யெமன் தலைநகர் சனா உட்பட அதிக மக்கள் வசிக்கும் நாட்டின் வட மேல் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஈரானின் உதவியுடன் ஆயுத பலத்தை வலுப்படுத்தி இருக்கும் அவர்கள் அண்மைய ஆண்டுகளில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அவர்களின் மேற்கத்தேய கூட்டணி நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஹூத்தி படையினர் திடீர் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து சில வாரங்களுக்குள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மந்தப் நீரிணையையும், செங்கடல் பகுதியில் சுமார் 150 கிலோமீற்றர் (90 மைல்) நீளமான கடலோரப் பகுதியையும் கைப்பற்றினர். இதன் மூலம், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான முக்கிய கடல் வழித்தடத்தின் மீது ஹூத்திக்களுக்கு புதிய பேரம் பேசும் சக்தி கிடைத்துள்ளது.
இந்த முன்னேற்றம், கடந்த பெப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் ஆரம்பித்த பரந்த போரில் ஒரு புதிய போர்முனையையும் உருவாக்கியது. ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருக்கும் நிலையில் மறுபுறம் உள்ள பாப் அல்-மந்தப் நீரிணையையும் முடக்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமை கவுன்சில் என அழைக்கப்படும்; யெமன் அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் தளங்களை நோக்கி பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவியதாக ஹூத்திகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களால் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், கடந்த 12 மணி நேரத்தில் யெமனில் சவூதி தலைமையிலான படைகள் நடத்தியதாக தாங்கள் கூறிய 50 வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஹூத்திகள் தெரிவித்தனர்.
மோதலைத் தணிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் முடிவுக்கு வந்த பின்னரே எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் ஆரம்பிக்க முடிவு எடுத்ததாக அல்-அலிமி குறிப்பிட்டார்.
ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், சவூதி அரேபியாவின் போருக்கான தயார் நிலை குறித்து தகவல் தெரிவித்த தரப்புகளின் கூற்றுப்படி, அமெரிக்கா ஏற்கனவே யெமனில் சவூதி அரேபியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது. அதேவேளை, சில பிராந்திய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் சவூதி அரேபியாவுக்கு முக்கியமாக தற்காப்பு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சவூதி ஆதரவு பெற்ற ஜனாதிபதி தலைமை கவுன்சில், ஹூத்திக்கள் சனாவைக் கைப்பற்றியதிலிருந்து நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் தலைமையகம், முன்னாள் தென் யெமனின் தலைநகரான ஏடனில் அமைந்துள்ளது.
2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தலைமை கவுன்சில் ஆதரவாக அரபு நாடுகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய சவூதி அரேபியா, யெமன் உள்நாட்டுப் போரில் தலையிட்டது. எனினும், ஹூத்திக்களைத் தோற்கடிக்க அதனால் முடியவில்லை.
போரில் ஈடுபட்ட தரப்புகளுக்கு இடையே 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், பெருமளவில் நீடித்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஈரான் போரின் தாக்கம் யெமனுக்கும் பரவிய நிலையில், ஹூத்திகள் சவூதி கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
கடந்த மாதம் ஹூத்திக்கள் நடத்திய விரைவான தாக்குதல் நடவடிக்கையில் பாப் அல்-மந்தப் நீரிணையைக் கைப்பற்றியதிலிருந்து, தரைவழிப் போரில் ஹூத்திக்களே முன்னிலை வகித்து வருகின்றனர். அந்தத் தாக்குதலின்போது யெமன் அரசுப் படைகள் நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்தன.
பாப் அல்-மந்தப் நீரிணை, செங்கடலின் தெற்கு வெளியேற்றப் பாதையாகும். மத்தியதரைக் கடல் மற்றும் ஆசியாவுக்கு இடையிலான முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக இது உள்ளது. இந்த ஆண்டு ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்று வழித்தடமாக அது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில், யெமனின் தாயிஸ் நகருக்கு அருகிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மலை உச்சிப் பகுதிகளில் அரசுப் படைகள் மற்றும் உள்ளூர் படைகளுக்கு எதிராக ஹூத்திக்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தெற்கு கடற்கரையில் உள்ள தாயிஸ் நகரத்தையும் ஏடன் நகரத்தையும் இணைக்கும் எஞ்சியுள்ள கடைசி வீதியை நோக்கி அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
யெமனின் சில பகுதிகளில், மோதல்கள் தீவிரமடைந்ததன் தாக்கத்தால் நான்கில் மூன்று குடும்பங்கள் பசியால் வாடி வருவதாக உலக உணவுத் திட்டம் கடந்த வாரம் தெரிவித்தது. இந்த மோதல்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளதுடன், கோடிக்கணக்கான மக்களுக்கான உணவுப் பொருள் விநியோகத்தையும் பாதித்துள்ளன.




