சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இரட்டை மரணங்கள்!

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இரட்டை மரணங்கள்!
ஒரு தாயின் நிழலில் பாதுகாப்பாக வளர வேண்டிய ஒரு மகளின் எதிர்காலம், ஒரே இரவில் பேரிருளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. கணவனை இழந்து தன் பிள்ளைக்காக வாழ்ந்த பெண்ணின் உயிரும் பறிக்கப்பட்டுள்ளது. அதனால் நிர்க்கதியாகி நிற்பது எதுவும் அறியாத 11 வயதான சிறுமியே.

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் கோயில் வீதி. அமைதியான சூழலை கொண்ட பகுதி. அப்பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை மங்கிய நேரம் கத்தியுடன் ஒரு 23 வயது இளைஞன் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதான பெண்ணின் மீது தாக்குதலை மேற்கொண்டு, தான் கொண்டு சென்ற கத்தியால் பெண்ணின் தலைமுடியை அறுத்து, அடித்துச் சித்திரவதை புரிந்து, அவரின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளான். 

இவற்றை தடுக்கச் சென்ற பெண்ணின் தாய் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளான். பின்னர் அங்கிருந்து அந்த இளைஞன் தப்பி சென்ற நிலையில் படுகாயங்களுடன் காணப்பட்ட தாயை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் துரித கதியில் முன்னெடுத்த வேளை அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தில் பாய்ந்து உயிரைமாய்த்துள்ளான் என்ற இன்னுமொரு தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 

புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த போது, இளைஞன் உயிர் மாய்த்த இடத்தில் இரத்த கறைகளுடன் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

 அதனை மீட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்திய போதே கோயில் வீதியில் பெண்ணை படுகொலை செய்த நபரே புகையிரதத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில், விருந்தோம்பல் துறையில் கற்கைகளை நிறைவு செய்த சமையல் கலைஞரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.





யார் இந்த ஆன்?


யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல ஆசானான இக்னேஷியஸ் என்பவரின் மகள். பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றவர் பாடசாலை காலத்திலையே கல்விச் செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டவர். 

திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவனைப் பிரித்து வாழ்ந்துள்ளார். அவர்கள் பிரிந்திருந்தபோதே, 2021ஆம் ஆண்டு அவரது கணவன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

கணவனை இழந்த பின்னர் தனது தாய் – தந்தையுடன் மகளின் எதிர்கால கனவுகளுக்காக வாழ்ந்துள்ளார் ஆன். அக்காலப் பகுதியில் விருந்தோம்பல் துறையில் கற்று, சிறந்த சமையல் கலைஞராக விளங்கியுள்ளார். 

தற்போது விருந்தோம்பல் துறை கற்கைகளை கற்பிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் வருகை விரிவுரையாளராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையிலையே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சந்தேகநபரான தேவதாஸ் புகழரசன், கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர். (வயது 23) இந்த இளைஞனே அப்பெண்ணை படுகொலை செய்து, பெண்னின் தாய் மீதும் தாக்குதலை மேற்கொண்டு படுகாயங்களுக்கு உள்ளாக்கிய சந்தேகநபர். குறித்த இளைஞனும் கொலையான பெண் கற்பித்த விருந்தோம்பல் கற்கை நிறுவனத்தில் கற்றுள்ளான். 

பின்னர் யாழில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் அத்துறை சார்ந்து பணியாற்றி வந்துள்ளான். பெண்ணைக் கொலை செய்த பின்னர், கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் பெண்ணின் வீட்டில் இருந்து தப்பிச் சென்று, சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் சென்று அரியாலை பகுதியில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளான். இளைஞன் உயிர் மாய்த்த இடத்தில் இருந்த இரத்தக் கறையுடனான கத்தியையே பொலிஸார் மீட்டுள்ளனர்.


இருவருக்குமான உறவு நிலை என்ன?


கொலையான பெண் மற்றும் கொலை செய்து உயிரை மாய்த்த ஆண் இருவருக்கும் இடையில் எவ்வாறான உறவு நிலை காணப்பட்டது என்பதை தெளிவுபடுத்தவோ, சொல்லவோ இருவரும் உயிருடன் இல்லை. கொலைச் சந்தேகநபரான இளைஞன், 2003ஆம் ஆண்டு பிறந்துள்ளான். 

பெண் 1994ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அதாவது கொலையான பெண் அந்த இளைஞனை விட 09 வயது அதிகமானவர். அதனால் அவர்களுக்கு இடையிலான உறவு முறைச் சிக்கல் காணப்பட்டு இருக்கலாம். அது எவ்வாறானது என்பதனை தெளிவுபடுத்த இருவருமே உயிருடன் இல்லை.

தாய், தந்தையை இழந்து தவிக்கும் சிறுமி.

உயிரிழந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமி தனது 06 வயதில் தந்தையை இழந்து தவித்தார். இன்று தனது தாயையும் இழந்து தவிக்கிறார். அந்தச் சிறுமியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனும் தனது உயிரை மாய்த்துக் கொண்டதால், இச்சம்பவத்தில் யாரை விசாரிப்பது ? யாருக்குத் தண்டனை கொடுப்பது? 

ஆனால், இறுதியில் அநாதையாக்கப்பட்டு நிற்பது அந்த சிறுமி மட்டுமே. தந்தையையும் தாயையும், இழந்து நிற்கும் சிறுமியின் எதிர்காலம் என்ன? அந்த சிறுமிக்காக இந்தச் சமூகம் எவ்வாறு ஆறுதலாக இருக்கப் போகின்றது? அந்த சிறுமியின் வாழ்க்கை இனிமேல் தான் ஆரம்பிக்கவுள்ளது. 

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்குச் சமூகமாக நாம் எதனை வழங்கப் போகின்றோம்?. வன்முறைப் போக்குகள் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை. சுயநலமும் கட்டுப்பாடற்ற கோபமும் எத்தகைய பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இக்கொடூர நிகழ்வே சாட்சி. இச்சம்பவம் இன்னமும் ஓரிரு நாட்களுக்கு பேசுபொருளாக இருக்கும் பின்னர் எல்லோராலும் மறக்கப்பட்டு விடும். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் தடுப்பது எவ்வாறு என்பதுதான் நம்முன் உள்ள சவால். மனிதநேயமும் நிதானமும் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது சமூகப் பொறுப்பாக எப்போது மாறும்?

 
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்