சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷ

நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடயம் இந்த வாரத்தில் பரபரப்பான செய்தியாக அமைந்து விட்டது.

அண்மைய வாரங்களில் ராஜபக்‌ஷ குடும்பத்தில் இடம்பெற்ற இரண்டாவது கைது சம்பவமாக இது அமைந்துள்ளது. நாமல் ராஜபக்‌ஷ எம்.பி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவருடைய தாயாரும் தற்பொழுது பிறிதொரு குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகித்த காலப்பகுதியில், முதல் பெண்மணியாகவிருந்த ஷிரந்தி ராஜபக்‌ஷ ‘சிரிலிய சவிய’ என்ற சமூகநல அமைப்பொன்றை உருவாக்கி, அதன் தலைவராகச் செயற்பட்டு வந்தார்.

இந்த அமைப்பின் நிதியத்தில் பணவிவகாரம் சம்பந்தமாக ஏற்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் வைத்தியசாலையான கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா நிதி ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. 

எனினும், வைத்தியசாலைக்கு குறித்த ஸ்கானர் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அத்துடன், வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடையென்றும் தெரியவந்துள்ளது.

அரசாங்க வங்கியிலிருந்த நிதி ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குக்கு மாற்றப்பட்டமை மற்றும் அவ்வாறு மாற்றப்பட்ட பணம் குறித்த நோக்கத்திற்காக அன்றி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விசாரணைகள் 2015 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் இவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு, சுதுவெல்ல பகுதியில் அமைந்துள்ள அரச வங்கிக் கிளையில், ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் மேலும் இருவரின் கூட்டுக் கணக்காக அந்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டதாகத் தெரியவந்ததையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

முதலில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் வீட்டுக்குச் சென்ற நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றிருந்தனர். சாதாரண நபர்கள் குற்றமிழைத்திருந்தால் தமது அலுவலகத்திற்கு அழைத்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள், ஷிரந்தியிடம் வாக்குமூலம் பெற்றது முன்னாள் சபாநாயகரின் இல்லத்திலாகும்.

இதன் பின்னர், 2017 ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்‌ஷவிடம் மற்றுமொரு வாக்குமூலம் பெறப்பட்டது.

அதாவது, ‘சிரிலிய சவிய’ அமைப்புக்குச் சொந்தமான வாகனமொன்றின் பயன்பாடு தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவாகியது. இதன் பின்னர் விசாரணைகள் பெரிதாக முன்னோக்கி நகரவில்லை. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர் இந்த விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுடன், இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2026 ஆம் ஆண்டில் இந்த விசாரணைகள் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த விடயத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்‌ஷவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக அவர் நாட்டை விட்டுச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருப்பதாக அவருடைய தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டிருந்தது.

இவர், கடந்த 6 ஆம் திகதி அதிகாலை நாடு திரும்பிய நிலையில், ஒக்டோபர் 13 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை, நாரஹேன்பிட்டி, பூர்வாராம வீதியிலுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவின் வீட்டிற்குச் சென்றனர்.

சுமார் இரண்டு மணி நேர வாக்குமூலப் பதிவின் பின்னர், ஷிரந்தி ராஜபக்‌ஷ விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேவேளை, ‘சிரிலிய சவிய’ கணக்கு விசாரணைகள் தொடர்பாகத் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவின் கணவருமான பிரதீப் காரியவசமும் கைது செய்யப்பட்டார்.

சிரிலிய சவிய அமைப்புக்கான நிதியை தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து மாற்றும்போது இவரே அதன் தலைவராக இருந்தார். ஆணைக்குழுவில் சுமார் 6 மணிநேர வாக்குமூலப் பதிவுக்குப் பிறகு, சந்தேகநபர்களான ஷிரந்தி ராஜபக்‌ஷ மற்றும் பிரதீப் காரியவசம் ஆகியோர் புதனன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களின் கைது குறித்து நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள், ‘ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கானர் இயந்திரம் ஒன்றை வாங்குவதாகக் எனக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்த 10 மில்லியன் ரூபா அரசாங்கப் பணத்தை உரிய நடைமுறைகளை மீறி ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு வழங்கியமை மற்றும் அத்தொகையைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இரு சந்தேகநபர்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டனர்.

வழக்கமான நடைமுறைகளுக்குப் புறம்பாகவே இந்த நிதி வழங்கப்பட்டதாக வங்கியின் அன்றைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி பிரதீப் காரியவசம் இலஞ்சச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் ஊழல் குற்றத்தை இழைத்திருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இக்கணக்கில் இந்த 10 மில்லியன் ரூபா மட்டுமன்றி, அன்றைய வெளிவிவகார அமைச்சிலிருந்து ரூபா 8.8 மில்லியனும், சீன நிறுவனமொன்றிலிருந்து ரூபா 22 மில்லியனும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் குறித்த சட்டத்தின் கீழும் விசாரணைகள் நடப்பதுடன், தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட சர்ச்சைக்குரிய இந்த நிதியைக் கொண்டு டொரிங்டன் பகுதியில் வீடு ஒன்று வாங்கப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஷிரந்தி ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிணை மனுவை முன்வைத்திருந்தார்.

‘சிரிலிய சவிய’ என்பது 2006 முதல் செயல்படும் அரசு அங்கீகாரம் பெற்ற நலன்புரி அமைப்பாகும். தேசிய சேமிப்பு வங்கி தமது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலமே பணத்தை வழங்கியது. அதனை மறுக்கவில்லை, அத்தொகை இன்றும் அதே சுதுவெல்ல கிளையின் கணக்கில் அப்படியே உள்ளது. ஏனெனில் சி.டி. ஸ்கானர் வாங்குவதற்கு ரூபா 160 மில்லியன் தேவைப்பட்ட நிலையில், 2014 வரை ரூபா 42 மில்லியனே சேர்ந்தது.

2014 இல் ஆட்சி மாற்றத்தின் போது புகார் அளிக்கப்பட்டு கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இயந்திரத்தை வாங்க முடியவில்லை; தவறு எதுவும் நடக்கவில்லை. கணக்கின் முடக்கம் நீக்கப்பட்டால் தேசிய சேமிப்பு வங்கி அத்தொகையைத் திரும்பப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஷிரந்தி ராஜபக்‌ஷ கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுதான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். 73 வயதான இவர், 2019 முதல் இதய நோயாளி, மூளை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளும் உள்ளன. இவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

எனினும், ஷிரந்தி ராஜபக்‌ஷ எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் கைது விவகாரம் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ராஜபக்‌ஷ குடும்பத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கைது என்பதால் குடும்பத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதனை சித்தரிப்பதற்கு எதிரணியில் உள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

உண்மையில் ஷிரந்தி ராஜபக்‌ஷ தொடர்பான விசாரணைகள் புதியவை அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட விசாரணைகளையே தற்போது ஆணைக்குழு முன்னோக்கிக் கொண்டு சென்றுள்ளது. இது எவ்விதத்தில் அரசியல் பழிவாங்கலாக அமையும் என்பதே இங்குள்ள வினா!

கடந்த காலத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பயன்படுத்தி இது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு முயற்சித்தவர்கள் யார் என்பது புரியாததொன்றல்ல.
!
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்