சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!

அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோதனையில் பல ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். விசாரணையின் தொடர்ச்சியாக, பல்வேறு நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, கடந்த 16-09-2026 அன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய சென்னையில் 2 இடங்கள், திருச்சியில் 2 இடங்கள் மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, வழக்கு தொடர்பான 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், 2 டெஸ்க்டாப் கணினிகளின் உள்கட்டமைப்பு வன்தட்டுகள், ஒரு டேப்லெட், ஒரு ஆப்பிள் ஐபேட் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் 18-09-2026 அன்று விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜரானார். 

அப்போது அவரிடம், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 118 ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், புகார்தாரரின் ஆதாரங்கள், அன்பில் மகேஸ் அமைச்சராக இருந்தபோது எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? அதில் எத்தனை பள்ளிகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து கேள்விகள் தயாரித்து அதன்படி விசாரணையில் ஈடுப்பட்டனர்.


அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவரது முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன் அலுவலகத்திற்கு அன்பில் மகேஷ் சென்று பேசிவிட்டு பின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது சாலையிலேயே வைத்து சென்னை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்து வந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்