கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 25 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுக்களுடன், சட்ட மாஅதிபரினால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி இந்த குற்றப் பத்திரிகையை சட்ட மாஅதிபர் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வாறு குற்றப் பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேரில் ஒருவரான, யாசிம் பாவா அப்துல் ரவூப் 2023ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் 24 பேரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தன.
270-க்கும் அதிகமானோரின் உயிரிழப்பு மற்றும் 500-க்கும் அதிகமானோர் காயமடைய காரணமான தாக்குதலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்ற அடிப்படையில் 23,270 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, 15 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதுடன், எஞ்சிய 9 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேர் யார்?

01.மொஹமட் இப்ரைஹிம் மொஹமட் நவுபர் என அழைக்கப்படும் நவுபர் மௌலவி
இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபராக மொஹமட் இப்ரைஹிம் மொஹமட் நவுபர் என அழைக்கப்படும் நவுபர் மௌலவி இந்த வழக்கில் பெயரிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் நவுபர் மௌலவி மீது 940 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் சாட்சி கூண்டிலிருந்து நவுபர் மௌலவி சாட்சி வழங்கியிருந்தார்.
''இந்த வழக்கில் எனக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சஹரான், வஸ்துன், இன்ஷாப், இல்ஹாம் உள்ளிட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர்கள் உள்ளடங்களாக 9 பேருடன் இணைந்து தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இனவாதம் மற்றும் பயங்கரவாத கருத்தரங்குகளை செய்ததன் ஊடாக இனங்களுக்கு இடையில் ஒன்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் எனக்கு எதிராக 940 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன்." என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மொஹமட் இப்ரைஹிம் மொஹமட் நவுபர் என அழைக்கப்படும் நவுபர் மௌலவிக்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
02.மொஹமட் ஷரிப் ஆதம் லெப்பை
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்டு, தற்கொலை குண்டுத் தாக்குதலில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹரான் ஹஷீமின் மாமனாரே மொஹமட் ஷரிப் ஆதம் லெப்பை ஆவார்.
இவர் இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மொஹமட் ஷரிப் ஆதம் லெப்பைக்கு 240 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
''எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நான் நிராகரிக்கின்றேன். இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என கூறுகின்றேன். சஹரானின் மாமனார் என்பதற்காக மாத்திரமே என்மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்கள்." என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், இலங்கை, நீதிமன்றம், சிறைத் தண்டனை
படக்குறிப்பு, கட்டுவபிட்டிய தேவாலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள்
03.ஹயாத்து மொஹமட் மில்ஹான் (அபு சிலா)
ஹயாத்து மொஹமட் மில்ஹான் என அழைக்கப்படும் அபு சிலாவிற்கு நேற்றைய தினம் 240 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு ரி-56 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதல் நடாத்துவதற்கான பயிற்சிகளை வழங்கியமையின் ஊடாக, தாக்குதலை நடாத்துவதற்கு ஆதரவு வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
04.மொஹமட் இப்ரைஹிம் சாதீக் அப்துல்லா (அபு உமர்)
அபு உமர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 240 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வண்ணாத்திவில்லு பகுதியில் இரகசியமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இவர் மீது சட்ட மாஅதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
05.மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் (அபு தாரிக்)
அபு தாரிக் என அழைக்கப்படும் மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் என்ற நபருக்கு 200 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாது, இந்த சந்தேகநபர் நீதிமன்ற விசாரணைகளில் அமைதி காத்து வந்திருந்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், இலங்கை, நீதிமன்றம், சிறைத் தண்டனை
படக்குறிப்பு, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
06.மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் (அபு மிஸான்)
அபு மிஸான் என அழைக்கப்படும் மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீனுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் 200 வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாணந்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து எடுக்கப்பட்ட பெட்டியொன்றில் காணப்பட்ட பிளாஸ்டரில் தனது கைரேகை இருந்ததாக தெரிவித்தே தன்னை போலீஸார் கைது செய்ததாக மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தான் இதுவரை பாணந்துறை பகுதிக்கு செல்லவில்லை என தெரிவித்த அவர், தனது வீட்டிலிருந்தவாறே இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் வியாபாரத்தை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இனிப்பு பண்டங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒரு தரப்பினர் தனது வீட்டிற்கு வந்த வேளையில், அவர்களுக்கு அதனை பொதி செய்துகொடுப்பதற்காக வீட்டிலிருந்த பிளாஸ்டருடனான பெட்டியை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையிலேயே, அபு மிஸான் என அழைக்கப்படும் மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீனுக்கு 200 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
07.அப்துல் மனாப் மொஹமட் பிரிதவுஸ்
இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கில் அதிக கால சிறைத் தண்டனையை பெற்றுக்கொண்ட நபராக அப்துல் மனாப் மொஹமட் பிரிதவுஸ் காணப்படுகின்றார்.
இதன்படி, அப்துல் மனாப் மொஹமட் பிரிதவுஸிற்கு 260 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக இந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் சாட்சி வழங்கியிருந்தார்.
08.அப்துல் லதீப் மொஹமட் சாபி (சாபி மௌலவி)
சாபி மௌலவி என அழைக்கப்படும் அப்துல் லதீப் மொஹமட் சாபிக்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது வாக்குமூலத்தை கட்டாயப்படுத்திப் பெற்றுக்கொண்டதாக அப்துல் லதீப் மொஹமட் சாபி நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
09.மொஹமட் இப்ரைஹிம் அப்துல் ஹக் (அபு பலா)
அபு பலா என அழைக்கப்படும் மொஹமட் இப்ரைஹிம் அப்துல் ஹக்கிற்கு 240 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
10.மொஹமட் ரமிஷ் மொஹமட் சாரிக்
மொஹமட் ரமிஷ் மொஹமட் சாரிக்கிற்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், சட்ட மாஅதிபரினால் இவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
11.உசைனுல் ரிஸ்வி காலித் சமீர்
உசைனுல் ரிஸ்வி காலித் சமீரிற்கு நீதிமன்றத்தினால் 200 வருட கடூழிய சிறைத்; தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், சட்ட மாஅதிபரினால் இவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
12.மொஹமட் ஹனீபா சேயினுல் ஆபீதீன் (அபு ஹினா)
அபு ஹினா என அழைக்கப்படும் மொஹமட் ஹனீபா சேயினுல் ஆபீதீனிற்கு 200 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
13.மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் (அபு நான்ஷியார்)
மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் என்ற நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவருக்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14.ரஷீக் ராசா உசைன்
ரஷீக் ராசா உசைன் என்ற நபருக்கு 220 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், சட்ட மாஅதிபரினால் இவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
15.கச்சி மொஹமட் ஜெஸ்மின்
கச்சி மொஹமட் ஜெஸ்மின் என்ற நபருக்கு 200 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 9 பேர் யார்?

குற்றம் சுமத்தப்பட்டிருந்தவர்களில் 9 பேரை நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்ய நேற்றைய தினம் தீர்மானித்திருந்தது.
இதன்படி, விடுதலை செய்யப்பட்ட 9 பேரின் பெயர் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
01.மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் (அபு தாவுத்)
02.மொஹமட் இப்னிகார் மொஹமட் இன்சாப் (அபு மொஹமட்)
03.ரஷிட் மொஹமட் இப்ரைஹிம்
04.சேயினுல் அப்தீன் மொஹமட் ஜசின்
05.மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஷ்வான்
06.மீரா சஷிட் மொஹமட் நப்லி (அபு சனா)
07.மொஹமட் அமீன் அயன்முல்லா
08.மொஹமட் அன்சார் தீன் ஹில்மி
09.மொஹமட் அக்ரம் அஹமட்
வழக்கு விசாரணையின் போது உயிரிழந்த நபர்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்ட மாஅதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த 25 பேரில் ஒருவர் வழக்கு விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்திருந்தார்.
யாசிம் பாவா அப்துல் ரவுப் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.




