இந்த குண்டு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டிருந்த 25 பேருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு, 200 தொடக்கம் 260 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் காவலில் இருந்த போதே மரணமடைந்து விட்ட நிலையில், ஏனைய 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு வெளியிடப்பட்டு விட்டதால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.
ஏனென்றால், ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விவகாரம் என்பது எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
இது ஒரு பரந்துபட்ட- பல வழக்குகளை கொண்ட ஒரு தொகுப்பாக இருக்கிறது.
அதில் ஒரு வழக்கின் தீர்ப்பு மாத்திரம் இப்போது வெளிவந்திருக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் 40இற்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும், 280 இற்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல், பல கிளை சம்பவங்களுக்கும் வழக்குகளுக்கும் காரணமாகியிருக்கிறது.
இதற்கான பொறுப்புக்கூறலும், பரந்துபட்ட ரீதியாக ஒன்றாக மாறியிருக்கிறது.
அதன் ஒரு கட்டத்திற்கான நீதிமன்ற தீர்ப்பு மாத்திரமே வெளியாகியிருக்கிறது.
இது இந்த சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் அல்லது மறைமுகமாக தொடர்புபட்டிருந்தவர்களுக்கான தண்டனைகளை மையப்படுத்தியது.
ஆனால், இந்த தாக்குதல்களை ஒட்டி இன்னும் பல விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த தாக்குதல்கள் வெறுமனே ஒரு தீவிரவாத எண்ணம் கொண்ட குழுவினால் முன்னெடுக்கப்பட்டது என்பது மாத்திரமல்ல. அதற்கு அப்பால் அந்தக் குழுவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு சதித்திட்டம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விசாரணைகளும் கூட பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன..
இந்த தாக்குதலுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு பகுதியினர், சதித்திட்டம் தீட்டி, செயற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.

ஜெனரல் சுரேஷ் சலே
இதனை அடுத்து, அவர் தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதேவேளை கோட்டாபய ராஜபக் ஷ, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மற்றொரு பக்கத்தில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுப்பதில், பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அலட்சியமாக இருந்தது தொடர்பான வழக்குகளும் உள்ளன.
தாக்குதல் நடக்கவுள்ளதாக முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய மற்றும் கடமை தவறியதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகளில் அவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் உள்ளிட்டோருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தரப்பினர், கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் அமைப்புகளினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Inspector General of Police Pujith Jayasundara and former Defence Secretary Hemasiri Fernando
தாக்குதல் நடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்தாதல், மைத்திரிபால சிறிசேன குற்றவியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொண்டார்.
பொலிஸ் மா அதிபராகவும் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர்கள், தண்டனை பெற நேரிட்டது.
பிரதான சந்தேக நபர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் மாத்திரம் இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும், இந்த சம்பவங்களை ஒட்டிய ஏனைய வழக்குகள் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளன. சில வழக்குகள் இப்போது, ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றன.
இந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கே நீண்ட காலங்கள் தேவைப்படும்.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
இந்த தாக்குதல் சம்பவம் மிகப்பெரிய அளவிலான விசாரணைகளுக்கும் பரந்துபட்ட கைதுகள் மற்றும் புலனாய்வுகளுக்கும் வழிவகுத்திருக்கிறது.
இந்தத் தாக்குதல் தடுத்திருக்கக் கூடிய ஒன்று. அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அலட்சியங்களும் கவனயீனங்களும் அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்திருக்கின்றன.
அரச மற்றும் பாதுகாப்புத் தரப்புகளின் இந்தப் பலவீனங்கள், இந்த திட்டத்தை தீட்டியவர்களுக்கு- சதி செய்தவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
இந்தச் சதித்திட்டம் தொடர்பான விசாரணைகளில் இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் உள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகக் கொண்டிருக்கும் தகவல்கள் பல அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.
பிரதான சூத்திரதாரியாக இருந்தவர் யார் என்பதைக் கண்டறிவது தான், ஒட்டுமொத்த வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வரும்.
உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் எந்தளவுக்கு நேர்மையாகவும் பக்கச் சார்பின்றியும் முன்னெடுக்கப்படும் என்ற கேள்வி இன்னமும் நீடிக்கிறது.
ஏனென்றால் இந்த விசாரணை வளையத்திற்குள் பலம் வாய்ந்த அரசியல் தரப்புகள் இருக்கின்றன.
சக்தி வாய்ந்த படைத்தரப்பு அதிகாரிகளும் தொடர்புபட்டிருக்கின்றனர்.
இராணுவ புலனாய்வு பிரிவில் ஒரு பகுதி இதில் சம்பந்தப்பட்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில், சக்திவாய்ந்த இந்த தரப்புக்களின் தொடர்புகள் மற்றும், சதித் திட்டங்கள் அம்பலப்படுத்தப்படுவதை விரும்பாத சக்திகள் அல்லது உண்மைகள் வெளிவருவதை தடுக்க முற்படும் தரப்புகள், அவற்றை தடுப்பதற்கு முற்பட கூடும்.
இவ்வாறான தடைகளைத் தாண்டி, இந்த தாக்குதல்கள் தொடர்பாக முழுமையான புலனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படுமா என்பது கேள்விக்குறி தான்.
அந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் வரை, இந்த சந்தேகம் நீடித்திருக்கும்.




