சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

புத்தசாசன அமைச்சுடனான பேச்சில் திருப்தியில்லை விகாரமஹாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு முன்னால் முகாமிட்ட தேரர்கள் : போராட்டம் தொடருமெனவும் அறிவிப்பு

புத்தசாசன அமைச்சுடனான பேச்சில் திருப்தியில்லை விகாரமஹாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு முன்னால் முகாமிட்ட தேரர்கள் : போராட்டம் தொடருமெனவும் அறிவிப்பு
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் 'காவி உடைக்கு நீதி - சுதந்திர சுதந்திர நடைபயணம்' தொனிப்பொருளில் பாதயாத்திரை மேற்கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடாரமமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் நீதிமன்றதடை உத்தரவை அடுத்து, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு முன்பாக ஒன்றுகூடிய தேரர்கள் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று இணக்கம் காணப்படாததை அடுத்து கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராடிய தேரர்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் 54தேரர்கள் உள்ளடங்கலாக விடுக்கப்பட்ட தடை உத்தரவை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் பின்னர் ஒன்றுகூடி ஊர்வலமாக கொழும்பு 7இல் உள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு முன்பாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞானசார தேரருக்கு நீதி கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தைத் தொடரப்போவதாகத் தெரிவித்த தேரர்கள் தமக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் அல்லது அதிகாரிகள் உறுதிமொழி வழங்கிய பின்னரேயே அங்கிருந்து வெளியேறுவோம் என்றும் அறிவித்தனர்.

இதனையடுத்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பீ.சேனாதீர உள்ளிட்ட அதிகாரிகளுடன் உரையாடுவதற்காக நான்கு தேரர்கள் அழைக்கப்பட்டனர். 

எனினும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எவ்விதமான இணக்கமும் காணப்படாமையினால் அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்கலாக அனைவரும் பேரணியாக வந்து, விகாரமஹா தேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு முன்பாக சமய வழிபாடுகளை முன்னெடுத்தோடு தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தினை தொடரப்போவதாக கூறி முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பலாங்கொடைகஸ்ஸப்ப தேரர்,

அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு தெளிவான பதிலை வழங்கவில்லை. எங்களுடைய போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதன் மூலமோ, எங்களில் சிலரைக் கைது செய்வதன் மூலமோ எங்களுடைய கோரிக்கையை இல்லாமல் செய்ய முடியாது.

எங்கள் தரப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதற்காக நாங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இங்கு வரவில்லை.

வன்முறையில் ஈடுபடுவதும் எங்களுடைய நோக்கமல்ல. சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்பதும், பௌத்த பிக்குகளின் காவி உடை மற்றும் பௌத்த சாசனத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுமே எங்களுடைய கோரிக்கையாகும்.

கண்டியிலிருந்து கொழும்பு வரையிலான இந்தப் பாதயாத்திரையில் நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். மழையிலும் நடந்து வந்தோம். 

எங்களுடைய கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. சில பிக்குகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டு வந்த எங்களுடைய கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளோம்.  ஆனால், எங்களுடைய கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது.  புத்தசாசன அமைச்சின் அதிகாரிகளையும் சந்தித்தோம். எங்களுடைய பிரச்சினைகளை எழுத்துமூலம் வழங்குமாறு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், எங்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எனவே, ஞானசாரதேரர் விடுதலை செய்யப்படும் வரை நாங்கள் கொழும்பிலேயே தங்கியிருந்து எங்களுடைய போராட்டத்தைத் தொடர்வோம். ஞானசார தேரருக்காக காவி உடையைத் தயாரித்து, அதனை ஊர்வலமாகக் கொண்டு சென்று ஜனாதிபதியிடம் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவிக்கையில்,

ஞானசார தேரரின் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும், அதிகாரிகள்  தொழில்நுட்பத் தவறுகளைக் காரணம் காட்டி அவருக்கு தண்டனை வழங்கி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே நாம் போராடுகின்றோம். கண்டியிலிருந்து ஆரம்பித்த எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எத்தனை தடையுத்தரவுகளைப் பெற்றாலும் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது. தேவைப்பட்டால் ரில்வின் சில்வாவின் பெலவத்தை அலுவலகத்துக்குச் செல்வோம். அன்றும் தடையுத்தரவு பெறலாம். ஆனால், எமது போராட்டத்தைக் கைவிடமாட்டோம். மகா சங்கத்தினருக்கு எதிராகத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

பௌத்த சாசனத்துக்கும் காவி உடைக்கும் இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யும் வரை, அஹிம்சை வழியில் எமது போராட்டத்தைத் தொடர்வோம். எமது போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கையைக் கொண்டு எமது பலத்தை மதிப்பிட வேண்டாம். வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்' என்றார்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்