2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பமான நாள் முதலாக, மேற்குலகு தான் நினைக்கும் வேளையில் உக்ரேன் விவகாரத்தை முடித்து வைக்க ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கியின் பதவியின் மீது கை வைக்கும் என்பதை பல முறை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
அது இன்று உண்மையாகி உள்ளதைப் பார்க்க முடிகின்றது. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஸெலென்ஸ்கி தடையாக இருக்கிறார் என்பதால் உக்ரேனில் புதிய ஜனாதிபதி பதவியில் அமர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.
ஈரான் போர் காரணமாகவும், ரஸ்யாவில் உள்ள பெற்றோலிய இலக்குகளைக் குறிவைத்து உக்ரேன் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் காரணமாகவும் உலகில் பெற்றோலியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகி உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
ரஷ்யாவில் உள்ளே எரிசக்தி இலக்குகள் மீது தொலைதூர தாக்குதல்களை உக்ரேன் நடத்திவரும் நிலையில், அத்தகைய தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைகளை ஸெலென்ஸ்கி உதாசீனம் செய்துவந்தார்.
அதனால் கடுப்பான ட்ரம்ப், தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். அது மாத்திரமன்றி, ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளையும் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவு டீசலைக் கொள்வனவு செய்யவும் முன்வந்து உள்ளது.

இரண்டாவது முறையாக ஜனாதிபதிப் பதவியை ஏற்ற ட்ரம்ப், தான் பதவி ஏற்று 24 மணி நேரத்தில் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகத் தெரிவித்து இருந்தார்.
அது தொடர்பில் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதிலும், அவர் பதவியேற்று சற்றொப்ப இரண்டு வருடங்களை நிறைவு செய்ய உள்ள நிலையிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர அவரால் முடியாமல் உள்ளது. ஒவ்வொரு முறையும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை ஸெலென்ஸ்கியும், அவரது ஐரோப்பியக் கூட்டாளிகளும் முறியடித்து வந்த நிலையில், விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற ட்ரம்ப், தற்போது ஸெலென்ஸ்கியைப் பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பில் பேசத் தொடங்கி உள்ளார்.
இரண்டு வருடங்களாகத் தேர்தல் நடைபெறவில்லை, உக்ரேனில் ஜனநாயகம் நிலைநாட்டப்படாமல் உள்ளது என்ற அக்கறையோடு ட்ரம்ப் பேசவில்லை. மாறாக, ஸெலென்ஸ்கிக்குப் பதிலாக வேறு ஒருவரைப் பதவியில் அமர்த்துவது தொடர்பாக அவர் பேசியுள்ளமை கவனிக்கத்தக்கது. முதலாளித்துவத்தின் குணவியல்புகளுள் இதுவும் ஒன்று. தமக்கு இணக்கமான ஒருவரை, காரியம் ஆகும் வரை பதவியில் வைத்து அழகு பார்ப்பதும், காரியம் முடிந்ததும் அவர்களைக் கழட்டி விடுவதும் முதலாளித்துவத்துக்குப் புதிய விடயமல்ல. அமெரிக்காவைப் பொறுத்தவரை இது விடயத்தில் நன்கு பழக்கப்பட்டது அது. இதற்கு வரலாறு நெடுகிலும் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.

ஸெலென்ஸ்கியைப் பொறுத்தவரை நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ள நிலையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பது அவரது வாதமாக உள்ளது. தற்போது கூட தேர்தலை நடத்துவதாயின் குறைந்தது இரண்டு மாத காலமாவது போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். இதற்கு ரஷ்யா ஒருபோதும் சம்மதிக்காது என்பது தெரிந்தே அவர் தனது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
மறுபுறம், உக்ரேனில் தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால் ஸெலென்ஸ்கி வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமே. அமெரிக்கா கைவிட்டுள்ள ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்வதற்குப் பெரும்பாலான மக்கள் விரும்ப மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து ஸெலென்ஸ்கிக்கு எதிரான கருத்துகள் உக்ரேன் அரசியல் தரப்பில் இருந்து வெளிப்படத் தொடங்கி உள்ளதையும் பார்க்க முடிகின்றது.
இதுநாள் வரை ஸெலென்ஸ்கியைத் தலையில் வைத்துக் கொண்டாடிய மேற்குலக ஊடகங்களும், அடுத்த ஜனாதிபதி யார் என்ற ஆய்வில் இறங்கி உள்ளன.
முன்னாள் படைத் துறைத் தலைவரும், தற்போது பிரித்தானியாவுக்கான தூதுவருமான ஜெனரல் வலேரி ஸலுஸ்னி இந்தப் போட்டியில் முன்னணியில் உள்ளார்.

இவை யாவும் நடப்பதாயின் முதலில் ஸெலென்ஸ்கி பதவியைத் துறக்க வேண்டும். தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னதாக தேர்தல் ஒன்று அமைதியாக நடத்தப்படுவதற்கான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் ஸலுஸ்னி போட்டியிட முன்வர வேண்டும். இதற்குக் காலம் எடுக்கும். அதுவரை ட்ரம்ப் காத்திருப்பாரா எனத் தெரியவில்லை.
தற்போதைய போரில் உக்ரேன் தரப்பை அமெரிக்கா ஆதரித்து வருகின்ற போதிலும், ட்ரம்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பது வெளிப்படையான உண்மை. தனது சொல் கேட்டு நடக்கும் ஒருவராக ஸெலன்ஸ்கி இல்லை என்பதனாலேயே அவரை மாற்றும் முடிவுக்கு ட்ரம்ப் வந்துள்ளார் என்பதுவும் வெளிப்படையான உண்மை. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி கடந்த வாரம் உக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கையை வழக்கம் போன்று அமெரிக்கா வழங்கவில்லை என உக்ரேன் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானால் நிலைமை பாரதூரமான கட்டத்தை எட்டி விட்டது எனப் புரிந்து கொள்ளலாம்.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இரண்டு தரப்பிலும் இழக்கப்படும் பெறுமதியான உயிர்கள் காக்கப்படுவதும், சொத்தழிவு தடுக்கப்படுவதும் ஏற்புடையதே. அதற்காக, ஸெலென்ஸ்கியின் பதவியைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது வருத்தம் தரும் விடயமாக இருந்தாலும், முதலாளித்துவ சக்திகளைப் பொறுத்தவரை அது வழக்கமான ஒன்றே. எனவே, இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
சுவிசிலிருந்து சண் தவராஜா




