அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான தற்போதைய போர் முடக்க நிலைக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டின் மீது தாக்குதல்களைத் தொடங்க உத்தரவிட்டால், இந்த வீரியமிக்க ஆயுதத்தைப் பயன்படுத்த வெள்ளை மாளிகையும் பென்டகனும் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
MOAB என்ற ஆயுதத்தின் அதிகாரபூர்வ பெயர் GBU- 43/B Massive Ordnance Air Blast என்பதாகும். இதன் எடை சுமார் 9,800 கிலோ ஆகும். இந்த குண்டு, 8,500 கிலோ உயர் வெடிபொருட்களை உள்ளடக்கியது.
இது அணு ஆயுதம் இல்லை என்றாலும், அமெரிக்க இராணுவத்தின் மிகப் பிரமாண்டமான குண்டாகும்.
இந்த ஆயுதம் இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ISIS) குகை வளாகங்களை அழிக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
ஈரானின் முக்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை முடக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும்.

Pickaxe Mountain
ஈரான் இரகசியமாக அணு ஆயுதக் கூறுகளைச் சேமித்து வைத்துள்ளதாகக் கருதப்படும் Pickaxe Mountain உள்ளிட்ட நிலத்தடி அணுசக்தி தளங்கள் மற்றும், ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி ஆலைகளை இலக்கு வைத்து பொருளாதார ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவது அமெரிக்காவின் திட்டமாகும்.
சர்வதேச ஊடக செய்திகளின்படி, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு (Midterm Elections) முன்னதாக புதிய இராணுவ நடவடிக்கைகளை அந்நாடு முன்னெடுக்கப் போவதில்லை என்று ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடன் ஒரு திருப்திகரமான உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், புதிய ஆயுதத் தாக்குதல் திட்டம் எப்போது வேண்டுமானாலும் செயற்படுத்தப்படலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு ஈரான் தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு வெளிநாட்டுத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தங்கள் நாட்டுப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய ஆயுதப் பரிசீலனை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முறுகல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், தனது இராணுவத்தின் மிக வலிமையான, அதேசமயம் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய வழக்கமான குண்டான ‘குண்டுகளின் தாய்’ எனப்படும் பிரமாண்டமான இக்குண்டை ஈரான் மீது வீசுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருவது சர்வதேச ரீதியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய அணுசக்தி அமைப்புகள் மற்றும் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்த அமெரிக்க இராணுவம் திட்டங்களைத் தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்தக் குண்டு ஈரானின் பலமான நிலத்தடி அணுசக்தி மையங்களை உண்மையில் அழிக்குமா என்பது குறித்து இராணுவ நிபுணர்கள் மத்தியில் பெரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இக்குண்டு GPS வழிகாட்டல் மூலம் மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெடிப்புச் சக்தி கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரியது. ஒரு நகரத்தின் 9 பெரிய வீதித் தொகுதிகள் கொண்ட பரப்பளவை இக்குண்டு கணநேரத்தில் தரைமட்டமாக்கும் திறன் கொண்டது.
இந்த குண்டு ஈராக் போரின் போது அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. எதிரிகளின் மனஉறுதியைச் சிதைக்கவும், அமெரிக்காவின் அதீத பலத்தைக் காட்டவும் இக்குண்டு வடிவமைக்கப்பட்டது. பொதுவாக பதுங்கு குழிகளைத் தாக்கும் குண்டுகள் (Bunker Busters), பூமியை ஆழமாகத் தோண்டி உள்ளே சென்றுதான் வெடிக்கும். ஆனால் MOAB குண்டு அப்படிப்பட்டது அல்ல.
இது தரைக்கு மேல், காற்றில் இருக்கும்போதே வெடிக்கும் (Air-blast weapon). காற்றில் வெடிக்கும்போது உருவாகும் பயங்கரமான காற்று அழுத்தம் மற்றும் அதிர்வலைகள், தரைப்பரப்பில் உள்ள அனைத்துக் கட்டடங்கள், தளங்கள் மற்றும் வாகனங்களை அடியோடு தகர்த்துவிடும். நிலப்பரப்பில் பெரும் பரப்பளவை இது அழிக்கவல்லது.
ஈரான் தனது அணுசக்தி சாதனங்களை வெறும் நிலத்தில் வைக்கவில்லை; கடினமான கிரனைட் பாறைகளுக்கு அடியில், பல நூறு அடிகள் ஆழத்தில் நிலத்தடி அரண்களாக அமைத்துப் பாதுகாத்து வருகிறது. MOAB தரைக்கு மேலே பெரும் சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும். பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு செல்லும் வலிமை இதற்கு கிடையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் ஈரான் மீது இக்குண்டு வீசப்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற அச்சமும் உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது. மேலும், இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான பெரும் போராக வெடிக்கவும் வழிவகுக்கும்.




