சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

முன்னைய ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட விசாரணைகள்!

முன்னைய ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட விசாரணைகள்!
-வெளிச்சத்துக்கு வரும் பாரிய ஊழல் மோசடிகள்!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள், கடந்த கால அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள், அன்றைய காலத்தில் அரசாங்கத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாகவிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அன்றைய ஆட்சிகளின் உயர் அரசாங்க அதிகாரிகள் தொடர்பான 50 ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அடங்கிய பத்துப் பக்க ஆவணம் பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சபை முதல்வரும் அமைச்சருமான விமல் ரத்னாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணகள் பற்றிய தகவல்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

முன்னைய அரசாங்கங்கள் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்விசாரணைகளை முன்னெடுக்காத வகையில் முடக்கி வைத்திருந்த போதிலும், தமது அரசாங்கம் அவ்விசாரணைகளை முன்கொண்டு செல்வதாக அமைச்சர் விமல் ரத்னாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இவை பழிவாங்கும் நோக்கம் கொண்டவை அல்லவென்றும், ‘ஊழல் மோசடிகளை ஒழிப்போம்’ என மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதன் வெளிப்பாடே என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பசில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பிரசன்ன ரணதுங்க, ஏ.எச்.எம். பௌஸி, பந்துல குணவர்தன மற்றும் ரோஹித போகொல்லாகம ஆகியோர் தொடர்பான வழக்குகளும் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ஷஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி பரிவர்த்தனைகள், கிரிஷ் கொடுக்கல் வாங்கல், மிக் விமானக் கொள்வனவு, திவிநெகும நிதி மோசடி வழக்கு, சில் துணி விநியோக வழக்கு மற்றும் கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள், ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்களான கீத் நொயார், உபாலி தென்னக்கோன் ஆகியோர் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல முக்கிய பாரதூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ராஜபக்ஷ குடும்பம் மீது தொடரும் வழக்குகள்:

பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது அதிகமான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புதல்வரான நாமல் ராஜபக்‌ஷ தற்பொழுதும் விளக்கமறியலில் உள்ளார். இது தவிர மஹிந்தவின் ஏனைய இரு புதல்வர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

ராஜபக்‌ஷ குடும்பத்தின் முக்கிய அரசியல்வாதிகளான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகத் தற்பொழுதும் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் குறிப்பிடும்படியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவர் தாக்கல் செய்திருந்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் போன விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்காக கோட்டாபய ராஜபக்‌ஷ கொழும்பிலிருந்து காணொளி மூலம் சாட்சியமளித்திருந்தார். இந்த நீதிமன்ற வழக்கும் தொடர்ந்து வருகின்றது.

இதற்கிடையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு இன்டர்போல் சிறப்பு அறிவிப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாவை 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தல்களுக்கான பிரசாரங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது விடயத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பல்வேறு தடவை அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும், அவர் வெளிநாட்டில் இருப்பதாலேயே அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு மாத்தறையில் சொத்துக் கொள்வனவு செய்தமை தொடர்பிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தொடரும் விளக்கமறியல்:

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று மஹிந்தவின் குடும்பத்தில் இருவர் விளக்கமறியலில் உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மீது தற்பொழுது இரு வேறு வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்‌ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு எயார்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா எனும் இலங்கை வர்த்தகர் அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளுக்கு சத்தியக் கடதாசி மூலம் சாட்சியளித்திருந்தார்.

இலங்கை நாணயத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான இந்த இலஞ்சப் பணம் ரூபாவாக மாற்றப்பட்டு நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட வர்த்தகர் சாட்சியமளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் பெருமளவுக்குப் பூர்த்தியடைந்திருப்பதாகவும், விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு ஊழல் மோசடி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட க்ரிஷ் கட்டடத் தொகுதித் திட்டத்திற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாமல் ராஜபக்‌ஷ இலஞ்சம் பெற்றதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரம்பமான விசாரணைகளில், இந்தியாவைச் சேர்ந்த க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காகப் பெறப்பட்டதாகக் கூறப்பட்ட ரூபா 70 மில்லியன், அந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படாமல் வேறு வழியில் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரசு தரப்பின் 2025 ஆம் ஆண்டு குற்றப்பத்திரத்தில், நாமல் ராஜபக்ஷ இந்த ரூபா 70 மில்லியனைப் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கிலும் நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி:


அதேவேளை, முன்னாள் முதல்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் இருப்பதால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் முதல் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷ ‘சிரிலிய சவிய’ என்ற சமூகநல அமைப்பொன்றை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டு வந்தார். இந்த அமைப்பின் நிதியத்தில் ஏற்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

சிறுவர் வைத்தியசாலையான லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா நிதி ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும், வைத்தியசாலைக்கு குறித்த ஸ்கானர் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அத்துடன், வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடையென்று பின்னர் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும், முன்னைய அரசாங்கங்களில் அவர்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி விசாரணைகள் முன்னோக்கி நகர்ந்திருக்கவில்லை. 

எனினும், தற்பொழுது அவ்விசாரணைகள் முன்னோக்கி நகர்கின்றமையால் அவர் கைது செய்யப்பட்டார். சிரிலிய மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தனியான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். 

நிதி மோசடிப் பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிங்கப்பூர் சென்று பின்னர் நாடு திரும்பியிருந்தார். அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார். அவருக்கு இருதயக் கோளாறு இருப்பதால் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாயாரும் மகனும் ஒரே தினத்தில் வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


யோஷித ராஜபக்ஷ

அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் அவர் இணைக்கப்பட்ட போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தியது.

2026 ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். உரிய தகுதி இன்றி கடற்படையில் இணைக்கப்பட்டமை மற்றும் சரியான தகுதி இல்லாத ஒருவர் வெளிநாடொன்றில் கடற்படை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயரிய பயிற்சித் திட்டமொன்றுக்கு அனுப்பப்பட்டமை போன்றவற்றால் பொதுமக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. 

இது குறித்த விசாரணைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவர் கடற்படையில் பணியாற்றிய 10 வருட காலத்தில் 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளமாகப் பெற்றிருப்பதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிரவும் பிரித்தானிய பயிற்சியைப் பெறுவதற்காக மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யோஷிதவுக்கு எதிராக நிதிச் சலவை தொடர்பான வழக்கொன்றும் உள்ளது. 

கல்கிஸை பகுதியில் காணியொன்றை மோசடியாகப் பெற்றுக்கொண்டமை குறித்த வழக்கும் அவர் மீது உள்ளது. இவர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தின் மற்றுமொரு அரசியல்வாதியான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ஊழல் மோசடி வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டது போன்று பெரும்பலான ஊழல் மோசடி வழக்குகளில் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டுள்ளனர். 

அது மாத்திரமன்றி இவர்களுக்கு எதிரான விசாரணைகள் கடந்த கால அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டபோதும், பின்னர் அவை கிடப்பில் போடப்பட்டிருந்தமையும் தெளிவாகிறது. இருந்தபோதும், இந்த விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் எனச் சித்திரித்து தமக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொள்ள எதிர்க்கட்சியில் உள்ள சிலர் முயற்சிக்கின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

இதற்காக நாட்டில் இடம்பெறக்கூடிய சில விடயங்களை இனவாதமாகவும் மதவாதமாகவும் மாற்றி, இதுபோன்ற விசாரணைகளை அரசியல் பழிவாங்கலாகக் காண்பித்து, நாட்டில் அரசுக்கு எதிரான அலையை உருவாக்கி, தமக்கு ஆதாயத்தைத் தேடிக் கொள்ள ஒரு தரப்பு முயற்சிப்பதாக நன்றாகவே தெரிகின்றது.

எனினும், பக்கச்சார்பற்ற எந்தவொரு அழுத்தங்களும் இல்லாத நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, யார் தவறிழைத்திருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டணைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அதிகமான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்