ஏகாதிபத்தியங்கள் தமது நலனில் காத்திரமான இலக்கை அடைவதற்கு திட்டமிடுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையிலான நெருக்கத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தையும் அதன் விளைவுகளையும் ஆராய்வது இவ்விடத்தில் முக்கியம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புவிசார் அரசியல் கோட்பாட்டை வரைந்த சிந்தனையாளர் வரிசையில் மைக்கிண்டரின் கோட்பாடு தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்பட்டது. அவரால் முன்வைக்கப்பட்ட இருதயநிலக் கோட்பாடு 21 ஆம் நூற்றாண்டையும் ஆக்கிரமித்து இருக்கின்றது என்பதை உலகம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறது.
ரஷ்யா உலகத்தில் இருதய நிலம் என்பதை மீண்டும் ஒரு தடவை புரியவைத்துள்ளது. அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் குடியரசுக் கட்சியையும் அதன் ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையையும் தீர்மானிக்கப் போகின்றது. அரசியல் பொருளாதாரத்தை நோக்கி அமெரிக்காவின் அணுகுமுறைகளை மாற்றி இருக்கின்றது. ரஷ்யாவை அனுசரித்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்துக்குள் அமெரிக்கா உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.
இரு தலைவர்களும் நண்பர்களாக விளங்கினாலும் கடந்த காலம் முழுவதும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ரஷ்யாவுக்கு எதிராகவே கொள்கைகளை வகுத்து வந்தனர்.
அதற்கான அடிப்படையை புவிசார் அரசியலே ஏற்படுத்தியிருந்தது. தற்போது தவிர்க்க முடியாமல் இடைக்கால வரவு செலவுத் திட்டம் போன்று அல்லது இடைக்கால அமைதி போன்று ரஷ்யாவின் பெற்றோலியத்தை அமெரிக்கக் கம்பனிகளும் நிறுவனங்களும் கொள்ளளவு செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அந்த நாட்டின் பொருளாதார சுமை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய நெருக்கத்தை அமெரிக்க- — ரஷ்ய நெருக்கமாகவோ அல்லது எதிரெதிர்த் துருவங்களுக்கு இடையிலான நெருக்கடியாகவோ அடையாளப்படுத்த முடியுமா என்ற கேள்வி மிகப் பிரதானமானது. அதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
புட்டின்- ட்ரம்ப் இடையிலான உறவு என்பதை பொருளாதார அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கடியின் பிரதிபலிப்பாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ரஷ்யா தனது பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்கா விதித்த தடைகளை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்கா உள்நாட்டு பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தினால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதும் முக்கியமான பொருளாதார நெருக்கடியாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதிலிருந்து பரஸ்பரம் மீள்வது இரு நாடுகளின் அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் நலன்கள் சார்ந்த புரிதலாகவே இருக்கின்றது.
இரு நாட்டுக்கும் இடையிலான சமரசம் என்பது பொருளாதார அடிப்படையில் எழுந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் இது தற்காலிகமானதாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே உள்ளது. ட்ரம்ப் ஒரு போதும் நிரந்தரமான கொள்கைகளை கடைப்பிடிப்பவர் அல்ல என்பதும் அது சார்ந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெளிவான புரிதலை கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்கு கொள்ளப்படக் கூடிய அம்சமாகும்.
அமெரிக்காவின் நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்ட உக்ரைன்- ரஷ்ய போர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கம் இப்போரை பாதிக்கக் கூடிய ஒன்றாக அமைவதோடு, உக்ரைனை அமெரிக்கா கைவிடுமா என்ற கேள்வி அதிகம் எழுப்பப்படுகிறது.
ஆனால் நடைமுறையில் உக்ரையினுக்கும் ரஷ்யாவுக்குமான போரின் பின்புலத்தில் அமெரிக்காவையும் விட ஐரோப்பிய நாடுகளே முதன்மையானவை என்ற அடிப்படையில் இப்போர்நிறுத்தத்துக்கு அல்லது அமைதிக்கான வாய்ப்பு குறைவானதாகவே தெரிகிறது.
அமெரிக்கா ஈரான் மீதான போரின் ஆரம்பகால பகுதியில் இருந்தே உக்ரைனை பெருமளவுக்கு கைவிட்டு விட்டது. இதனால் உக்ரைன் போரை கைவிடாத நிலையை அவதானிக்கின்ற போது ஐரோப்பாவுக்கே உக்ரைன்- ரஷ்யப் போர் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இப்போர் ரஷ்யாவினதும் புட்டினதும் கொள்கைளையும் இலக்குகளையும் கணிசமான அளவு பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்ற அடிப்படையில் ஐரோப்பிய நாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.
மறுபக்கத்தில் அமெரிக்கா போன்று ஐரோப்பியர்களும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இப்போரின் விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். அதனாலேயே இப்போர் நீடிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் ஒத்துழைப்பும் இராணுவ உதவியும் உக்ரைனுக்கு நிறுத்தப்படுகின்ற போது அல்லது ரஷ்யா பலப்படுத்தப்படுகிற போது போரில் தலைகீழான மாற்றங்களுக்கான வாய்ப்பு கூடியதாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும்.
அத்துடன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நிகழ்த்திய போரும் ரஷ்ய- அமெரிக்க நட்பினால் ஈரானை பாதிக்கும் என்ற விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஆழமான ஒரு விடயம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா புட்டினிடம் சரணடைந்ததே அன்றி, புட்டின் அமெரிக்காவிடம் சரணடையவில்லை என்று தெரிகின்றது. அதனால் போரை அமெரிக்கா ரஷ்யாவினது அணுகுமுறைகளுக்கேற்ற வகையிலே நகர்வுகளை செய்ய திட்டமிட்டு இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு.
ஈரான் ஒரு தேசிய உணர்வுடனான கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது. ஏறக்குறைய 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டும் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர். ஆனால் ஈரானியர் தமது தேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தேசிய உணர்வோடு செயல்படுபவர்களாக காணப்படுகின்றனர்.
இதனால் ரஷ்யாவின் அமெரிக்க நெருக்கம் ஈரானை பெருமளவுக்கு பாதிக்கும் என்பது கேள்விக்குரியது.

புட்டின்- ட்ரம்ப் நெருக்கம் உலகளாவிய அரசியலும் முரண்பாடான கற்பிதங்களை தந்திருக்கிறது. ஆனால் அதுவே யதார்த்தமானது. நலனுக்கு முன்னால் உக்ரைனும் இஸ்ரேலும் ஈரானும் ஒன்று என்பதை இரு ஏகாதிபத்தியங்களும் நிறுவியுள்ளன.
அத்தகைய முரண்பாடான அணுகுமுறைகள் மேற்குலகத்தின் இருப்பை அதிகம் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ஆட்சிக் காலம் முழுவதும் இவ்வாறு குழப்பகரமான ஜனாதிபதியாக தன்னை அடையாளப்படுத்தி இருப்பதன் விளைவுகள் அமெரிக்காவுக்கு சாதகமானதாக இருக்கின்றது என்பதை விட அமெரிக்காவின் எதிரிகளுக்கு சாதகமானதாக அமைந்திருக்கின்றது என்பது இதன் சாரம்சமாகும்.
இதனால் உலக ஒழுங்கில் ரஷ்யாவின் நிலை பிரிக்ஸ் கட்டமைப்பினால் பலப்படுத்தப்பட்டது போல் அமெரிக்காவுடனான நட்புறவினாலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிகழும் சமரசமாக இருந்தாலும் நடைமுறையில் அத்தகைய சமரசமானது ஏதோ ஒரு ஏகாதிபத்தியத்தின் அழிவுக்கு வித்திடுவதாக அமையும். இச்சூழல் ரஷ்யாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியது. எனவே புட்டின் – ட்ரம்ப் நெருக்கம் என்பது தற்காலிகமானது. இது ஏகாதிபத்தியங்களின் சமரசத்துக்கான வழிமுறையாக உள்ளது. உக்ரைன் மீதான போருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தக் கூடியது. உலகளாவிய எதிர்கால ஒழுங்கில் ரஷ்யாவின் நிலைப்பாடு பலமானதாக அமைவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கின்றது.
ஈரான் தனது கடல் படையை பாதுகாப்பதற்கும் தனது நிலத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும் தற்காலிகமான ஒரு வாய்ப்பை அமெரிக்க- ரஷ்ய நெருக்கம் ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதேநேரம் அத்தகைய உறவை உடைப்பது அதிக கவனம் கொண்டு இஸ்ரேல் செயல்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.




