சமீபத்திய பதிவுகள்
தமிழ் சினிமாவின் உச்சம்.. 700 கோடியை கடந்த முதல் தமிழ் படம்.. 76 வயதில் வரலாறு படைத்த ரஜினி!  •  ஹவுதிகளிடம் சரணடைந்த சவுதி! ரூ.8,400 கோடியுடன் களமிறங்கிய இளவரசர்?  •  இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி  •  அன்பில் மகேஸ் கைதின் பின்னணி என்ன? முழு விவரம்!  •  இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?

கொடியில் அரிவாள், கொள்கையில் ஜே.ஆர்

கொடியில் அரிவாள், கொள்கையில் ஜே.ஆர்
இலங்கையில் அரகலய சோஷலிச கோசங்களையும், இடதுசாரி  சிந்தனை சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கி ஜே.வி.பி- என்.பி.பி.அரசாங்கம் ஆட்சியேறி இரண்டு ஆண்டுகள்.  2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க இரண்டாவது விருப்பத்தேர்வில் 57,40,179 வாக்குகளைபெற்று வெற்றி பெற்றார்.

 நவம்பரில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கம் 159 ஆசனங்களை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளையும், வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் தராசில் போட்டு நிறுக்கவேண்டிய தருணம் இது.

இலங்கை அரசியலின் இன்றைய நிலை என்ன? இந்த கேள்விக்கு இரண்டு கொழும்பு பிரபல ஆங்கில நாளிதழ்களின் அண்மைய "தலையங்கம் (“editorial) அளவுகோலாகிறது. 


உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூட முடியாது என்பது மட்டும் அல்ல ஊடகங்களின் வாயையும் மூடி விட முடியாது.  ஜே.வி.பி. / என்.பி.பி. அரசாங்கத்தின் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை தொடும் நிலையில் மிகத் துணிச்சலுடன் அரசாங்கத்தின் சமகால சமூக, பொருளாதார, அரசியலை அந்த இரண்டு ஆசிரியர் தலையங்கங்களும்  சிவப்பு ஒற்றைக்கலராக அல்ல பஞ்ச வர்ண படமாக அம்மணமாக வரைந்துள்ளன. தமிழ் ஊடகப் பரப்பில் இவ்வாறான “எடிட்ரோரியல்” களை காண்பது அரிது.

முதலில் “த ஐலண்ட்”.

“ஜே.வி.பி. தனது பெலவத்தை அலுவலகத்தில் ரோஹணா விஜயவீராவின் உருவப்படம் ஏதேனும் இருந்தால், அதை அகற்றி ஜே.ஆர். ஜே.யின் உருவப்படத்தை வைக்கவேண்டும், என்பது ஒரு மிகையான, வன்மமான பார்வையாக இருக்காது. ஏனெனில் அதன் தற்போதைய கொள்கைகள், அதன் நிறுவனரின் கொள்கைகளைவிட ஜே.ஆர்.ஜே.யின் முதலாளித்துவ சிந்தாந்தத்துடன் மிகவும் நெருக்கமாக பொருந்துகின்றன….

ஜே.வி.பி. எப்போதாவது முதலாளித்துவக் கொள்கைகளை ஏற்கும் என்றோ, அதிலும் குறிப்பாக ஒரு மதப்பிரச்சாரத்தின் தீவிரத்துடன் அவற்றை பின்பற்றி பிரெட்டன் வூட்ஸ் இரட்டையர்களிடம் சரணடையும் என்றோ யார் நினைத்திருப்பார்கள்….?

விஜயவீராவின் ஒப்புதலுடன் கூடிய ஜே.வி.பி.யின் 36 பக்க புரட்சி கொள்கை பிரகடனம்;

“ஏகாதிபத்தியத்திற்கு மரணம், மக்களுக்கு விடுதலை”

“முதலாளித்துவத்திற்கு மரணம் சோஷலிசத்திற்கு வெற்றி” என்ற கம்யூனிஸ்ட் புரட்சி முழக்கத்துடன் முடிவடைகிறது.

” ஆனால் இன்றைய ஜே.வி.பி.தலைவர்கள் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜே.ஆர்.ஜே. இந்தியாவிடம் சரணடைந்தார் என்று அவரைக் கொல்ல முயன்றனர். இன்று அவர்களே இந்தியத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறார்கள்.”


நாட்டின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத்தை சிதைத்து அதன் பாதிப்புக்களை இறக்குமதிகள், மற்றும் தொழிலாளர் ஏற்றுமதி, உல்லாசப்பிரயாணம் மூலம்  ஈடுசெய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. 

உலகவங்கி, சர்வதேச நாணயநிதி நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. ஒப்பீட்டளவில் பணவீக்கம், டொலர் மீதான பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வேலையின்மை, வருமானக்குறைவு என்பன ஏற்பட்டுள்ளன. தர்க்க ரீதியாக ஏற்கக்கூடிய காரணங்களாக இயற்கை அழிவுகள், மத்திய கிழக்கு போர்  …. போன்றவற்றை குறிப்பிட்டாலும் முழுப் பொறுப்பையும் இயற்கைமீதும், போர் மீதும் தலையில் கட்டிவிடமுடியாது. 

எதிர்காலத்தில் இந்த இரு காரணிகளும் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் புவியியல், அரசியல் சூழலே நிலவுகிறது. அடுக்கடுக்காக வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் நாட்டின் உண்மையான பொருளாதார போக்கோடு ஒத்துப்போகவில்லை.

உள்நாட்டில் அரசாங்க கொள்கையால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நிவாரணத் தொகைகளை அறிவிப்பது ஒரு இடதுசாரி அரசாங்கத்தின் நீண்ட கால இலக்காக இருக்க முடியாது. 

ஒரேயொரு உதாரணத்தின் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். நாட்டின் நெல் வேளாண்மை மாவட்டங்களில் எல்நீனோ வறட்சியினால் சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விவசாயிகளின் உற்பத்திக்கான நியாயமான விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் பின்னடிக்கிறது. பொலநறுவை விவசாயிகளின் பேரணி மேடையில் விவசாய அமைச்சர்கிளின் கதிரைகள் காலியாக இருந்தன. 

முறைசாரா வருமானம், சரியான சமூகப் பாதுகாப்பு காப்பீடு இல்லாத இந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் வெறும் நிவாரணங்களை மட்டுமே அறிவிக்கிறது. மறு பக்கத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லாத காலத்திலும் அரிசியை இறக்குமதி செய்யும் முதலாளிகள் ரோல் ரோய்ஸில் ஓடவும், ஹெலிக்கொப்டரில் பறக்கவும்  துணைபோகிறது.

இதற்கு மாறாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்று மத்திய கிழக்கு நாடுகளில் – பல சர்வதேச அறிக்கைகள் கூறுவதுபோல் “அடிமைகளாக”(?) வேலை செய்யும் தொழிலாளர்கள்  தொழில்சார் விபத்து மரணங்களை சந்தித்தால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை  இருபது இலட்சமாக அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்கது. 

அவர்கள் இலங்கைக்கு அவர்களது ஒப்பந்த காலத்தில் உழைத்துக்கொடுக்கும் டொலரின் கணக்கில் இது ஒன்றும் பெரியதொகை அல்ல. இது தொழிலாளர் வெளியேற்றத்தை தூண்டும் ஒன்றாக வரையறுக்கப்பட்ட வகையில் செயற்படக்கூடும். ஆனால் வெளிநாட்டில் தொழில் விபத்தில் செத்தால் குடும்பத்திற்கு இருபது இலட்சம் கிடைக்கும் என்று எந்த குடும்பமும் தங்கள் உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதில்லை. 

ஆனால் இலங்கையில் வயற்காடுகளில்  யானை அடித்து செத்த மனிதர்களுக்கான இழப்பீடு எவ்வளவு?  இந்த இறப்பு தொழில் சார்ந்தது இல்லையா?  ஒரு மனித உயிரை  இந்த உலகில் எந்த இடதுசாரி அரசாங்கம் டொலரைக்கொண்டு மதிப்பிடுகிறது?

சர்வதேச நாணய நிதியம் கற்றவர்களுக்கான வேலையின்மை 43 வீதம் என்று கூறுகிறது. வேலைசெய்யும் தகுதியைக்கொண்ட  100 கற்றவ்ர்களில்  43 பேருக்கு வேலையில்லை. 

இலங்கையின் வளர்ச்சி புள்ளி விவரங்கள் இதை வெளிப்படுத்துகின்றனவா? ஒப்பீட்டளவில் இது உலகில் 19 வீதமாகவும், வங்காளதேசத்தில் 36 வீதமாகவும் , இந்தியாவில் 42 வீதமாகவும் உள்ளது. 

இந்த நிலையில் இலங்கை  இந்தியாவின் பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தீர்வாகுமா…?  இதனை கல்வி முறைமைக்கும், பொருளாதார முறைமைக்கும் இடையிலான இடைவெளி என்று இலகுவாக தப்பிக்கொள்ளமுடியாது.  

இலங்கை அடுத்து வரும் ஆண்டுகளில் கடன்மீளளிப்பில் நெருக்கடியை சந்திக்கும் என்று எச்சரிக்கிறது.  இது தான் நாணயப்பெறுமதி வீழ்ச்சியால் 1 டொலருக்கு சுமார் 400 ரூபாய் வரை பெருக்கி பேசப்படுகின்றன லொறி…லொறியாக பணம் உள்ளது என்ற கதையின் தாற்பரியம்.இன்னும்  சாதாரணமாக விளங்க சொன்னால் ஒரு லொறி அமெரிக்க டொலரை இலங்கையில் ஏற்றுவதற்கு 400 லொறிகள் தேவை. 

 இனி, த மோர்னிங் ..!

“ஒட்டுமொத்த என்.பி.பி.அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகமற்றதும், மக்கள் வாக்களித்ததுமான ஒரு ஆட்சிமுறையில் எதிர்க்கக் கூடிய தூண்களைத் தகர்ப்பதற்கும்,எதிர்ப்புக்களை அகற்றுவதற்குமான ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைச் சுடிடிக்காட்டுவதாக தெரிகிறது.

அரசைக்கைப்பற்றுவது என்பது அமைப்பு மாற்றம் அல்ல.ஒரே ஒரு கட்சியோ அல்லது அதிலுள்ள ஒரு சிறிய மையக்குழுவோ, எந்த வித கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் இன்றி அரசைக்கட்டுப்படுத்தினால், அது ஜனநாயகம் அல்ல. 

அது மக்கள் ஆதரவுடன் மாற்றத்தின் முகவராக வேடமிடும் மேட்டுக்குடியினரால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ஒற்றைக்கட்சி அரசாகும். என்.பி.பி. கட்சிக்கு ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் இறையாண்மை மீது உண்மையான அக்கறை இருந்தால் அது தன்னைத்தானே சரிபார்த்துக்கொண்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.”

இரண்டு வருட அநுர ஆட்சியை ‘த ஐலண்ட்’ பொருளாதார ரீதியாக மதிப்பீடு செய்துள்ள நிலையில் ‘த மோர்னிங் ‘ அரசியல் அதிகாரம் சார்ந்து மதிப்பீடு செய்கிறது. அரசை கைப்பற்றுதல் என்ற விடயத்தில் அரசியல் அமைப்பு பேசுகின்ற அரசு – அரசாங்கம் என்ற அடிப்படை வேறுபாட்டை அழித்து ஜே.வி.பி. – என்.பி.பி. அரசாங்கம் தான் அரசு என்ற ஒரு எதேச்சிகார வடிவத்தை அநுர அரசாங்கம் தோற்றுவிற்க முற்படுகிறது.

22 வது அரசியல் அமைப்பு திருத்தம் மூலமான  நீதிமன்றங்களை கட்டுப்படுத்துதல், பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுதல் என்ற  போர்வையில்  அரசியல் அமைப்பு வழங்கும் கருத்து சுதந்திர ஜனநாயக முன்னுரிமையை மறுத்தல்,  சிறாபான்மை தேசிய இனங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதை தடுத்து ஜனாதிபதியின் நேரடி முகவரான ஆளுநரின் மூலம் கட்சி அரசியல் செய்தல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோஷத்துடன் ஆளும்கட்சி,எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தல்…… போன்ற பல   ஜனநாயக அரசியல் அமைப்பு மறுப்பு செயற்பாட்டிற்கு  கடந்த இரண்டு ஆண்டுகளில் பல உதாரணங்களை காட்டமுடியும்.

அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையில் வெளிப்படைத்தன்மை அற்ற தன்மை குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காணப்படுகிறது. இந்த உலகில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர்  சமாதானத்தின் பேரில் போரையே குறியாகக் கொண்டு இயங்குகின்றன – போர் செய்யும் மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ‘நேட்டோ ‘ மாநாட்டில் அரசாங்க பிரதிநிதி கலந்து கொள்கிறார். 

நேட்டோவில் இடதுசாரி கொள்கை கொண்ட எத்தனை நாடுகள் உள்ளன….? சமாதானத்தை விரும்புகின்ற எத்தனை நாடுகள் உள்ளன? மறு பக்கத்தில் உக்ரைன் சண்டையின் பங்காளியான ரஷ்யாவுக்கு இலங்கை பாதுகாப்பு படையினர் பயிற்சி செய்கிறார்கள். இந்தியா,சீனா என்பவற்றுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசைக்கைப்பற்ற பயன்படுத்தப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் இருக்கும் போது  எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள்,  சிவில் சமூக அமைப்புக்கள் வீதிக்கு இறங்கி இருப்பது இரண்டு ஆட்சி ஆண்டில் அநுர அரசாங்கத்தின் சாதனைதானே….!

 நன்றி: ‘த ஐலண்ட்” மற்றும் “த மோர்னிங்”  20.09.2026.


— அழகு குணசீலன் —
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்