கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரக் காணொளிச் செவ்வியில், அவர் தன் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
தனக்கு எதிராக நியாயமற்ற வகையில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தடைகளை விதித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் இலக்காகுவதை தவிர்க்கும் வகையில் தாக்குதல்களை நடத்தப்பட்டதாக அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.
இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை, பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படாத வகையிலேயே போரை நடத்தினோம் என மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
ஆனால், ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை அதனை நிராகரித்ததுடன், 40ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்திருந்தது.
இதற்குப் பின்னரே போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், சிக்கலான அந்தப் போரில் அது தவிர்க்க முடியாதது என்றும் பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டது.
அதேவேளை, பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை, 'பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை' என்ற அரசாங்கத்தின் கூற்றை வெளிப்படையாக நிராகரித்தது.
இராணுவத்தின் குண்டுவீச்சுகள், சந்தேகத்திற்கு இடமின்றி கணிசமான பொதுமக்களுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்பதையும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
இப்போது ஜெனரல் சவேந்திர சில்வா, போரில் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார், ஆனால், தாங்கள் பொதுமக்களை விலக்கியே தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறார்.
அப்படியானால் பொதுமக்கள் எப்படி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்?
இராணுவம், பொதுமக்களை விலக்கி வைத்து நடத்திய தாக்குதலிலேயே இந்தளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்றால், நிலைமை எந்தளவுக்கு பாரதூரமானதென்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.
இந்த இடத்தில் அவர், போரில் உயிரிழந்த புலிகளும் பொதுமக்கள் என அடையாளப்படுத்தப்படலாம் என்ற ஊகங்களை எழுப்பி விட்டிருக்கிறார்.

அவரது சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய போது, சாதாரண உடையிலேயே காணப்பட்டார் என்றும் அவரது கையில் ஆயுதம் இருந்தது என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் சாதாரண உடையில் இருந்ததால், அவரையும் கூட யாரேனும் ஒரு பொதுமகன் எனக் கணக்கு காட்டக் கூடும் என அவர் கூறியிருக்கிறார்.
இது ஒரு திசை திருப்பும் கருத்தாக தெரிகிறது.
தீபனின் உயிரிழப்பை புலிகள் மறுக்கவோ, மறைக்கவோ இல்லை.
அப்படியிருக்க, அவரை பொதுமகன் என அடையாளப்படுத்தலாம் என்று ஊகங்களை எழுப்புவது தவறு.
இறுதிக்கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் சீருடையுடன், இராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் ஊடுருவத் தொடங்கியிருந்தனர்.
வன்னிக்குள் பல இடங்களில் கிளைமோர் தாக்குதல் நடத்திய இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் புலிகளின் சீருடையையே பயன்படுத்தியிருந்தனர்.
அத்துருகிரியவில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்ட போது, அங்கும் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சிக்கியிருந்தன. இவ்வாறான நிலையில், பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட பல சம்பவங்களுக்குப் பின்னால், இராணுவத்தினர் இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.
முள்ளிவாய்க்காலில், குறுகிய நிலப்பரப்புக்குள் போர் தீவிரமடைந்திருந்த போது, புலிகளின் சீருடையில் இராணுவத்தினர் ஊடுருவத் தொடங்கியதால், ஒரு கட்டத்தில் புலிகளின் தலைமை சீருடை அணிய வேண்டாம் என தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் உள்ளன.
ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்கள் உயிரிழப்புக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதையே அவரது கருத்துகளில் இருந்து உணர முடிகிறது.
தம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவர், தான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல, நாட்டுக்காகவே போரிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நாட்டுக்காக அவர் போரிட்டார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், நாட்டுக்காக போரிடும் வழிமுறைகள் இருக்கின்றன. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்களை மீறாத வகையில், சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு இணங்க நாட்டுக்காக போரிடுபவர்களை யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
இந்தச் சட்டங்கள் மீறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான், அவர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதுவே, அவர் மீதான சர்வதேச பயணத் தடை விதிக்கப்படுவதற்கும் காரணமாகியிருக்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகளை மறுப்பதோ, நான் போர்க்குற்றவாளி அல்ல எனக் கூறுவதோ இந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கான வழி அல்ல.
போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பது தான் இதற்கு சரியான வழி.
ஆனால், ஜெனரல் சவேந்திர சில்வாவோ, இலங்கை அரசாங்கமோ எந்தவொரு போர்க்குற்ற விசாரணைகைளுக்கும் இணங்கவில்லை.
உள்நாட்டில் அத்தகைய விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சர்வதேச அளவில் அத்தகைய விசாரணைகளை நடத்துவதற்கும் இணங்கவில்லை.
ஜெனரல் சவேந்திர சில்வா தன்னை ஒரு போர்க்குற்றவாளி அல்ல என்று சர்வதேச அளவில் நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு 2012ஆம் ஆண்டிலேயே கிடைத்தது.
அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
போரின் இறுதிக் கட்டங்களில் 58ஆவது டிவிசனின் தளபதியான சவேந்திர சில்வா, சட்டத்திற்குப் புறம்பான கொலை மற்றும் சித்திரவதை போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்ததாக நியூயோர்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், விடுதலைப் புலிகள் தளபதி ரமேஷின் மனைவி உள்ளிட்ட மனுதாரர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அமெரிக்கக் குடிமகன் அல்லாத ஒருவர், அமெரிக்காவிற்கு வெளியே நடந்த ஒரு செயலுக்காக அவருக்கு எதிராக உரிமையியல் வழக்குத் தொடர 'அயல்நாட்டு சித்திரவதைக் கோரிக்கைச் சட்டம் ' அனுமதிக்கிறது.
அந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தானோ அரச படையினரோ போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என சவேந்திர சில்வா வாதிட்டு வழக்கை வெல்ல முயற்சித்திருக்கவில்லை.
மாறாக, அப்போது ஐ.நா.வுக்கான துணைத் தூதுவர் என்ற இராஜதந்திரப் பதவியில் இருப்பதை காரணம் காட்டி, இராஜதந்திர விலக்குரிமையைக் கோரி அவர் அந்த வழக்கில் இருந்து தப்பினார்.
அந்த வழக்கு அப்போது அமெரிக்க நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது அவர், அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால்- தான் போர்க்குற்றவாளி அல்ல என்று நிரூபித்திருந்தால், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ அவருக்கு எதிராக தடைகளை விதிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
2011ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த ஒரே விடயம், இலங்கை அரசாங்கம் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தான்.
அந்தக் கோரிக்கைகளை இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அந்தச் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா.வுக்கான பிரதித் தூதுவராக, இராணுவத் தளபதியாக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பதவியில் இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஏனைய படை அதிகாரிகளும் அரசாங்கங்களுக்கு வலியுறுத்தவில்லை.
போர்க்குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்றால், இலங்கை அரசாங்கம் ஏன், பக்கச்சார்பற்ற, நம்பகமான, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை இன்று வரை தானும் நடத்தாமல் இருக்கிறது, சர்வதேச சமூகத்தையும் நடத்த விடாமல் தடுக்கிறது?
முன்னாள் இராணுவத் தளபதிகளான சரத் பொன்சேகா, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருந்தார்.
இப்போது, ஜெனரல் சவேந்திர சில்வா, எந்த போர்க்குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க தயார் என்கிறார்.
அப்படியானால், போர்க்குற்ற விசாரணைகளை உள்நாட்டில் நடத்தவோ வெளித்தரப்பு விசாரணைகளை முன்னெடுக்கவோ தடையாக இருக்கும் தரப்பு எது?
அரசாங்கம் தான் அதனைத் தடுக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
போர்க்காலத்தில் இருந்த மஹிந்த அரசாங்கம், பின்னர் வந்த கோட்டா அரசாங்கம் என்பன போருக்கான அரசியல் தலைமைத்துவம் வழங்கியதால், அச்சப்பட்டு ஒதுங்கியிருக்கலாம்.
மைத்திரி அரசாங்கம், ரணில் அரசாங்கம் என்பன ஏன் அதற்குத் துணியவில்லை?
இப்போதைய அநுர அரசாங்கமும் கூட, அத்தகைய விசாரணைகளுக்குத் தயாராக இல்லை.
எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டு விசாரணை களை நடத்தப் போவதும் இல்லை, சர்வதேச விசாரணையை அனுமதிக்கப் போவதும் இல்லை என்பதை தெரிந்து தான், ஜெனரல் சவேந்திர சில்வாவும் சரத் பொன்சேகாவும், போர்க்குற்றச்சாட்டுகளை மறுப்பதுடன், எந்த விசாரணைக்கும் தயார் என்கிறார்கள்.
எந்தவொரு அரசாங்கமும் படையினரை பொறுப்புக்கூற வைக்கப் போவதில்லை என்பதையும், படையினரைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை என்பதையும் உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள்.
தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வரும் கொள்கை ரீதியான முடிவு எடுக்காத வரை, ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களை, போர்க்குற்றச்சாட்டுகள் துரத்திக் கொண்டு தான் இருக்கும்.
தண்டனையில் இருந்து தப்பித்தாலும் இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
சத்ரியன்




